About Us

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தமது மொழியையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் தமிழ்ச் சங்கங்களையும், பள்ளிகளையும் அமைத்துக்கொள்வது இயற்கையானது. அந்த வகையில் டெலவர் பெருநிலப் பகுதியில் (Delaware Valley) வாழும் தமிழர்கள் தங்களுக்கென்று “டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, 2006-ஆம் ஆண்டு திரு சோமலெ சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் இயங்கிய செயற்குழுவின் முயற்சியாலும், குறிப்பாக அன்றைய செயலாளர் திரு. சுவாமி ஏலேஸ்வரம் அவர்களின் முயற்சியாலும் தொடங்கப்பட்ட பள்ளி நமது “டெலவர் தமிழ்ப் பள்ளி”. இங்குள்ள தன்னார்வலத் தொண்டர்களின் சீரிய உழைப்பால் நன்கு வளர்ச்சிகண்டு இந்த 2015-ல், பத்தாம் பள்ளியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

டெலவர் தமிழ்ப் பள்ளி தேசிய தன்னார்வலக் கல்வி அமைப்பான “அமெரிக்கக் கல்விக் கழகத்தில்” தன்னை இணைத்துக்கொண்டு, அதன் பாடத்திட்டங்களையும், கட்டமைப்பு (Infrastructure) வசதிகளையும் பயன்படுத்தி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகம், பிற பொறுப்பிலிருக்கும் அனைவரும், இங்கு கல்வி பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களே! தங்கள் குழந்தைகள் தமது தாய்மொழியைப் பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில், தன்னார்வலர்களாக முன்வந்து தமிழ்ப் பணி ஆற்றும் பெற்றோர்கள் பாராட்டுகளுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

பள்ளியில் தற்போது மழலை (Kinder Garden) நிலையிலிருந்து 7ஆம் நிலைவரை வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழ் மொழி கற்பிப்பதோடு நில்லாமல், குழந்தைகளுக்கு பாடல், நாடகம், நடனம் என பலதரப்பட்ட பயிற்சிகளும் தந்து தமிழ்ச் சங்க விழாக்களில் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் அரும் பணியையும் தமிழ்ப் பள்ளி ஆற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் ஆண்டு விழா நடத்தப்பட்டு, ஆண்டு முழுதும் கல்வி கற்றதைப் பாராட்டி, ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பட்டயம் (Trophy) வழங்கப்படுகிறது. மேலும், கலை நிகழ்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் டெலவர் மாநிலத்திலுள்ள ஏதேனும் ஒரு தேசியப் பூங்காவில், கூட்டாஞ்சோறுடன் (Potluck) கூடிய சிற்றுலா/மகிழ்வுலா (Picnic) நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, முதல் முறையாக, ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் அவர்களின் வயதுக்கேற்றார் போல் இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு, கல்விச் சுற்றுலாவிற்கு (Field Trip) அழைத்துச் செல்லப்பட்டார்கள். கல்விச் சுற்றுலா பயனுடையதாக இருந்ததாலும், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலத்தையும், பள்ளியின் தொடர் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பல ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயலாற்றும் வகையில் 2014-ஆம் ஆண்டில், பள்ளி நிர்வாகக் குழு (School Administrative Board) தொடங்கப்பட்டது. இந் நிர்வாகக் குழுவில், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையில் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் தேந்தெடுக்கப்பட்டு, பள்ளிப் பணியை ஒருங்கிணைப்பார்கள்.

தமிழ் மொழி படிக்கும் பயன் என்பது, தாய்மொழி கற்றோம் என்பதொடு நின்று விடாமல், நம் குழந்தைகளுக்கு மேலும் பயன் தருவதாய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மாநிலக் கல்வித் துறையிடம் தமிழ் பள்ளிக்குத் தர மதிப்பீட்டுச் சான்றிதல் பெறும் முயற்சியில், நமது தமிழ்ச் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்காக “தரமதிப்பீடு ஏற்புக் குழு (Accreditation Compalince Team – ACT)” என்ற ஒரு குழு உருவாக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பள்ளி குறித்த தகவல்கள்
School Info

இடம் / Place: Stanton Middle School
முகவரி / Address: 1800 LIMESTONE ROAD,Wilmington, DE 19804 (http://www.edline.net/pages/RCStanton)
கட்டணம் / Fee: $100.00
விண்ணப்பிக்க / Registration: https://deschool.tagdv.org/school-registration/

தொடங்கும் நாள் / Start Date: செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை (September 10, Friday)
பள்ளி நடக்கும் நாள் / School Day: வெள்ளிக்கிழமை (Friday)
பள்ளி நேரம் / School Time: மாலை 6:30 முதல் 8:30 வரை (6:30pm to 8:30pm)
ஒன்றுகூடல் (Assembly) – மாலை 6:30 – 6:45 (6:30pm to 6:45pm)
வகுப்பு (Class) – மாலை 6:45 – 8:30 (6:45pm to 8:30pm)